சில நாட்களுக்கு முன்னர் துக்ளக் இதழின் விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் தலைமையில் ராமர், சீதையின் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டது என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ் இனத்துக்காகப் பாடுபட்ட பெரியாரைப் பற்றி ரஜினி அவதூறாகப் பேசியதற்காக அவருக்குப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.

அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “நான் தவறான விஷயம் ஏதும் சொல்லவில்லை.1971-ல் பெரியார் நடத்திய பேரணி குறித்துத் தான் பேசினேன். இதற்காக நான் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் இது மறுக்கக் கூடிய சம்பவம் அல்ல மறக்க வேண்டிய சம்பவம்” திட்டவட்டமாகத் தெரிவித்தார். ரஜினியின் சர்ச்சை பேச்சு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தந்தை பெரியாரின் கருத்துக்கள் கோபுரங்களில் வைக்கப்பட வேண்டியவை. நான் உயரிய நிலையில் இருப்பதற்கும் தந்தை பெரியாரே காரணம். அவரைப் பற்றி முழுமையாகப் படித்துத் தெரிந்து கொண்ட பிறகே பேச வேண்டும் என்று தெரிவித்தார்.